தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக மிகவும் வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகி வருகின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா நோய் தொற்றுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து நோயாளிகளின் கூட்டம் குவிந்த வண்ணமே உள்ளது. அங்குள்ள 500 படுக்கைகளில் 490-க்கும் மேற்பட்ட படுக்கைகளில் நோயாளிகள் இருந்த வண்ணம் உள்ளனர்.
மற்ற முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளான ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியிலும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
இதனால் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்திய ‘வார்டுகளில்’ நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் கொரோனா தொற்று தனது உச்சத்தை தொட்டிருந்தது. படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நேரத்தில் அரசு தரப்பில் கல்லூரிகள், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு, லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது அதைப்போல் கல்லூரி விடுதிகள், அரசு கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் படுக்கைகள் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.