சென்னை பட்டாளம் ஓட்டேரி காவல் குடியிருப்பு எம்-பிளாக்கில் வசித்து வருபவர் சுகாசினி (38). இவரின் கணவர், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 7.4.2024-ம் தேதி ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் சுகாசினி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள், சுகாசினி, அணிந்திருந்த 4 சவரன் எடையுள்ள தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து சுகாசினி, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கின் பதிவு நம்பர்களை போலீஸார் கண்டறிந்து அதனடிப்படையில் விசாரித்தனர். விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கிட் (20), அங்கிட் யாதவ் (26) ஆகிய மூன்று பேர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தலைமைக் காவலர் மனைவி சுகாசினியிடம் மட்டுமல்லாமல் ஐ.சி.எஃப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் இரண்டரை சவரன் தங்கச் செயினைப் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைதானவர்களிடமிருந்து ஆறரை சவரன் எடையுள்ள இரண்டு தங்க செயின்கள், இரண்டு பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வடமாநில கொள்ளையர்கள் மூன்று பேரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் தப்பி ஓடினார்கள்.
அதில் அவர்களின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் மூன்று பேரும் ஹரியானாவிலிருந்து சென்னைக்கு வந்து சேப்பாக்கம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட வாடகைக்கு பைக்குகளை எடுத்திருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு மூன்று பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.