நாடு முழுவதும் ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயா்ந்தது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 220 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.
தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பண்ணை பசுமை கடைகள், நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்தது. இருப்பினும், விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி முதல் தரத்திலான தக்காளி கிலோ ரூ. 23-க்கும், இரண்டாம் தரம் தக்காளி ரூ.10-க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சில்லறையில் ரூ.20 முதல் ரூ.40-வரை விற்கப்பட்டது.
இதேபோல், பிற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
விலை விவரம் (கிலோ): பெரிய வெங்காயம் – ரூ. 28, உருளைக்கிழங்கு – ரூ.30, சின்ன வெங்காயம் – ரூ.60, கேரட் – ரூ.50, முட்டைகோஸ் – ரூ.13, வெண்டைக்காய் – ரூ.15, கத்தரிக்காய் – ரூ.10, பாகற்காய் – ரூ.20, வெள்ளரி – ரூ.20, புடலங்காய் – ரூ.12.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருப்பினும் இஞ்சி கிலோ ரூ. 200-க்கும், பூண்டு கிலோ ரூ.160-க்கும் விற்பனையாகின. இவற்றின் விலை குறையவில்லை.