சென்னையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக பள்ளிக்கரணையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை (வயது 64), விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த வக்கீல் சுப்பிரமணியன் (52) ஆகியோரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளநோட்டுகளை அச்சடித்த விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அச்சக உரிமையாளர் கார்த்திக் (41), அவருக்கு உதவியாக இருந்த சூளைமேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (37) ஆகியோரும் சிக்கினார்கள். இவர்களிடம் இருந்து ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள், கள்ள நோட்டை அச்சடிக்க பயன்படுத்திய எந்திரங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளநோட்டு விவகாரத்தில் வக்கீல் சுப்பிரமணியன் மூளையாக செயல்பட்டு உள்ளார். வக்கீல் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் கள்ள நோட்டு அச்சடித்து சொகுசு வாழ்க்கை வாழ விரும்பினார். சினிமா படப்பிடிப்பு காட்சிகளில் பயன்படுத்தப்போவதாக கூறி கள்ள நோட்டுகளை அச்சடித்து முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை மூலம் புழக்கத்தில் விட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இவர்கள் ரூ.50 லட்சம் வரை கள்ள நோட்டுகளை அச்சடித்து, இதில் ரூ.5 லட்சத்தை புழக்கத்தில் விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் வக்கீல் சுப்பிரமணியன் கள்ள நோட்டு விவகாரத்தில் மெல்ல, மெல்ல உண்மையை போலீசாரிடம் வெளிப்படுத்தி பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருக்கிறார்.

வக்கீல் சுப்பிரமணியனின் வாக்குமூலம் வருமாறு:-

Cதிரைப்பட தொழில் லாபம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது. எனவே திரைப்படம் தயாரித்து, வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். ஆனால் வக்கீல் தொழில் மூலம் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.

எனவே குறுக்கு வழியில் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் உதித்தது. எந்த வழியில் சென்றால் விரைவில் பணம் சேரும் என்று யோசித்தபோது கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவதுதான் சுலபமான வழி என்பதை முடிவு செய்தேன். அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

வடபழனியில் ‘பிரிண்டிங் பிரஸ்’ நடத்தி வரும் கார்த்திக்கின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சினிமா அதிபர்கள் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்கள். சினிமா காட்சிகளில் பயன்படுத்துவதற்காக ‘டம்மி’ ரூபாய் நோட்டுகளை அச்சடித்து தர வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு கை நிறைய பணம் தருவதாக சொல்கிறார்கள் என்று சொன்னேன்.

கார்த்திக்கும் ஒரு கணம் கூட யோசிக்காமல் உடனே சம்மதித்தார். அவருக்கு நான் ரூ.30 ஆயிரம் முன்பணம் கொடுத்தேன். மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டு வேலையை தொடங்கினார். ஒரு கட்டத்தில் கள்ள நோட்டுகள் என்று அவர் தெரிந்துகொண்டார். நான் போலீசில் சொல்லி விடுவார் என்று பயந்தேன். ஆனால் அவர் நம்பிக்கையுடன் நடந்துகொண்டார். ரூ.1 கோடியே 30 லட்சம் வரை கள்ள நோட்டுகளை அச்சடித்தோம். கள்ளநோட்டு மூலம் ‘கோடீஸ்வரன்’ என்ற பெயரில் சினிமா தயாரித்தேன்.

அதில் கள்ளநோட்டுகளை அதிகளவில் புழக்கத்தில் விட்டோம். இந்த படத்தை இயக்கிய சென்னை திருவொற்றியூரை சேர்ந்த டைரக்டருக்கு மட்டும் ரூ.11 லட்சம் கொடுத்தோம். நாங்கள் அடிக்கடி கள்ளநோட்டுக்களை மாற்றிய வள்ளுவர்கோட்டம் பகுதியிலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கினோம். ஏழையாக இருந்து கோடீஸ்வரனாக உயர்வது எப்படி? என்பதுதான் இந்த படத்தின் கதை ஆகும். ‘டாஸ்மாக்’ கடைகள், கிளப்புகளிலும் கள்ளநோட்டுகளை மாற்றினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. அல்லது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here