சென்னை:

ஆசாமியின் பெயர் அனுமந்தப்பா (வயது 41). இவர் அண்மையில் திருட்டு லேப்டாப் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்னை ரிச்சி தெருவுக்கு வந்தார். பழுதான நிலையில் இருந்த அதை பழுது நீக்கி விற்று தரும்படி, கடைக்காரர் ஒருவரிடம் கொடுத்தார். ஆனால் அதை பழுது நீக்க முடியாது என்று கடைக்காரர் சொன்னார். திருட்டு லேப்டாப் என்று சந்தேகப்பட்டதால்தான் கடைக்காரர், பழுது நீக்க மறுக்கிறார் என்பதை அனுமந்தப்பா புரிந்து கொண்டார். இதனால் அந்த கடைக்காரரை வழக்கு ஒன்றில் மாட்டிவிட எண்ணி, அவரது கடை முகவரியில், திருவல்லிக்கேணி போலீசாருக்கு, மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டார்.

அந்த மிரட்டல் கடிதத்தில், கிறிஸ்துமஸ் தினத்தன்றும், புத்தாண்டு தினத்தன்றும் சென்னையில், பெரிய அளவில் குண்டு வெடிக்கும் என்றும், இதனால் சென்னை நகரமே தகர்க்கப்படும் என்றும் வாசகங்கள் காணப்பட்டது. இது சம்பந்தமாக அதிரடி நடவடிக்கை எடுத்து கடிதம் எழுதிய ஆசாமியை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

அனுமந்தப்பா இதேபோல இன்னொரு மிரட்டல் கடிதத்தை கர்நாடக மாநில போலீசாருக்கும் அனுப்பிவிட்டார். கர்நாடக மாநில தனிப்படை போலீசாரும் சென்னை வந்து விசாரணை நடத்தினார்கள். இரண்டு மாநில போலீசாருக்கும் தண்ணி காட்டிய ஆசாமி அனுமந்தப்பாவை போலீசார் அவரது பாணியை கடைபிடித்து அவருக்கு பொறி வைத்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து, அவரிடம் பேசி போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அப்பாவி கடைக்காரரை மாட்டிவிட முயற்சித்த திருட்டு ஆசாமி அனுமந்தப்பாவின் முயற்சியை போலீசார் முறியடித்தனர். அனுமந்தப்பா கர்நாடக மாநிலம், ஹோஸ்பேட் தாலுகா, கமலாபுரத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இருந்து திருட்டு லேப்டாப் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here