தாம்பரம் போலீஸ் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் முகாம் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவபெருமாள். இவர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.
இந்த நிலையில் தாம்பரத்தை சேர்ந்த அக்பர் என்பவர் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் நேற்று முகாம் கண்காணிப்பாளர் சிவபெருமாள் மீது புகார் செய்தார். இதை தொடர்ந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுபடி தாம்பரம் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, தாம்பரத்தை சேர்ந்த அக்பர் என்பவரை அழைத்து விசாரித்தார்.
விசாரணையில் அக்பர் கூறியதாவது:-
தனக்கு அறிமுகமான திருவள்ளூர் மாவட்டம், பெருங்காவூரை சேர்ந்த செல்வி மீனா என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டதாக கூறினார். இதையடுத்து நான், தனக்கு தெரிந்த முகாம் கண்காணிப்பாளர் சிவபெருமாளிடம் சொல்லி பெற்று தருகிறேன் என்று கூறி அவரிடம் அழைத்து சென்றேன். அப்போது சிவபெருமாள், ஏற்கனவே அந்த வழக்கை தற்போது கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் விஜயலட்சுமி விசாரித்து வந்தார். அவரிடம் சொல்லி பெற்று தருகிறேன் என கூறினார்.
இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியோ எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. எனவே நீங்கள் உயர் அதிகாரிகளை பாருங்கள் அல்லது மாவட்ட கலெக்டரை பாருங்கள் என்று கூறி விட்டார்.
அப்போது சிவபெருமாள் என்னிடம் இன்ஸ்பெக்டருக்கு பணம் கொடுக்கவேண்டும் என ரூ.20 ஆயிரம் கேட்டு பெற்றார். மேலும் போக்குவரத்து செலவு என கூறி மேலும் ரூ.10 ஆயிரம் பெற்று கொண்டார். இந்த பணத்தை நான் செல்வி மீனாவிடம் இருந்து பெற்று கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து தாம்பரம் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் முகாம் கண்காணிப்பாளர் சிவபெருமாள் மீது கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.