சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் நடிப்பில் இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
உலக பிரபலமான விஞ்ஞானியான டாக்டர் சரவணனை(லெஜண்ட் சரவணன்) சுற்றி கதை நகர்கிறது. ஆன்டிபயாடிக்ஸ் துறையில் புரட்சி செய்த டாக்டர் சரவணன் தன் மக்களுக்காக கிராமத்தில் இருந்தே வேலை செய்கிறார். நீரிழிவால் அவதிப்பட்டு வந்த சரவணனின் நண்பர்(ரோபோ ஷங்கர்) இறந்துவிடவே, அந்த நோய்க்கு மருந்து கண்டிபிடிக்க முடிவு செய்கிறார்.
ஆனால் சரவணனின் முந்தைய ஆராய்ச்சிகளால் பாதிக்கப்பட்ட ஃபார்மா மாஃபியாவுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் சுமன், ராகுல் தேவ் உள்ளிட்டோரை வைத்து அவருக்கு தனிப்பட்ட முறையில் இழப்பை ஏற்படுத்தி சரவணனின் ஆராய்ச்சியை நாசம் செய்ய முடிவு செய்கிறார்கள். இறுதியில் அவர் அந்த மருந்தை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா..? என்பதை விளக்குவதே தி லெஜண்ட்.
லோகேஷன்கள் அனைத்தும் சூப்பர். பாடல்களில் ஹாரிஸூக்கான முத்திரை இல்லாவிட்டாலும், படத்தோட இணைந்து பார்க்கும் போது பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையில் பல இடங்களில், ஒரு இடத்தில் பயன்படுத்திய இசையை அப்படியே காப்பி பேஸ்ட் அடித்திருக்கிறார். இவ்வளவு சிக்கல்களிலும் படத்தை தாங்கி நிற்பது அனல் அரசின் சண்டை இயக்கமும், வேல் ராஜின் ஒளிப்பதிவும்தான்.
திரைக்கதையில் சுவாரஸ்யம் அல்லாமை, தேவையில்லாத பஞ்ச் வசனங்கள், பாடல்களை வலிந்து திணிந்திருப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்திருந்தால் அண்ணாச்சி திட்டு வாங்காமலாவது தப்பித்திருக்கலாம்.
முகத்தில் நடிப்பு கலை கட்டாயம் சினிமாவில் இருக்க வேண்டும். அண்ணாச்சி மீண்டும் படம் எடுத்து நடித்தால் முதலில் நடிப்பு பயிற்சி எடுத்து நடித்தால் நல்லதாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த ‘தி லெஜண்ட்’ பண ஆட்டம்…..