பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கடந்த வாரம் வழங்கிய கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையினையும், தொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் உதவிகளையும், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடிவந்து பொதுமக்கள் தரும் மனுக்களை அலுவலர்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 13.02.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.சுரேஷ் என்பவர் மாடு வாங்கி தொழில் தொடங்க வேண்டி வங்கிக்கடன் கோரி மனு அளித்திருந்தார். அதனை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக திரு.சுரேஷ் அவர்களுக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், வேப்பந்தட்டை வட்டம் பாதாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவி பிரியா என்பவர் பி.எஸ்.சி நர்சிங் பயில வங்கிக்கடன் பெற்றுத்தரக்கோரி கோரிக்கை மனு வழங்கியிருந்தார். அதனையும் கனிவுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.1.80 இலட்சம் கல்வி கடன் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மேலும் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ், 4 பயனாளிகளுக்கும், PMAY திட்டத்தின்கீழ் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 2 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அ.லலிதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கணபதி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு.பரத்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.