ஆன் லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

நெடிய போராட்டங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலை பெற்று சட்டமாகியது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. இனி எந்த நிறுவனமும், எந்த வகையிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சட்டத்துத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டை கேட்ட நீதிபதிகள், அவசர வழக்காக தாக்கல் செய்யப்படும் மனு உரிய காரணத்தை கொண்டிருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் சாதாரண வழக்காக வழக்கமான பட்டியலில் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் மனு சிங்வி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதும் காங்கிரஸ் கட்சி ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவையில் வாக்களித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here