கன்னியாகுமரி :
கொல்லங்கோடு அருகே கரிமரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 23), தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர். திருமணம் செய்வதாக கூறி வாலிபர் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பமானார்.
தற்போது அவர் 5 மாதம் கர்ப்பம் என கூறப்படுகிறது. அவர் மேட விளாகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார். இந்நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி சிறுமி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க சென்றார். அங்கு அவரது ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகாதது தெரிய வந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகிகள் குளச்சல் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் நிஷாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.