நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக கருதப்படும் இந்த விருது, தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. இது 2018-ல் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.
”இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என அவரது பங்களிப்பு ஐகானிக்காக உள்ளது” என்று ஜவடேகர் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
இந்த விருதுக்கு ரஜினிகாந்தை தேர்வு செய்த நடுவர் மன்றத்தில் பாடகர்கள் ஆஷா போஸ்லே மற்றும் சங்கர் மகாதேவன், நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிஸ்வாஜீத் மற்றும் திரைப்பட இயக்குநர் சுபாஷ் காய் ஆகியோர் இருந்தனர்.
ரஜினிகாந்த் 1975-ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதையடுத்து பாட்ஷா, தளபதி, அண்ணாமலை, முத்து, சிவாஜி, சந்திரமுகி, மற்றும் எந்திரன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றினார்.
ரஜினிகாந்தின் கடைசி படம் 2020-ஆம் ஆண்டில் வெளியான தர்பார். தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.