தஞ்சை பெரியகோவில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
 
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. சிவாலயங்களில் பிரதோ‌‌ஷ வழிபாடு தனி சிறப்பு பெற்றது. அதேபோல் தஞ்சை பெரியகோவிலில் பெரிய நந்திக்கு பிரதோ‌‌ஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
 
 
சிறப்பு அபிஷேகம்
 
இத்தகைய சிறப்பு மிக்க சனிப்பிரதோ‌‌ஷம் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதியும், ஆகஸ்டு 1-ந் தேதியும் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் பக்தர்கள் இன்றி பெரியகோவிலில் பிரதோ‌‌ஷம் நடைபெற்றது.
 
இந்த ஆண்டின்(2020) கடைசி பிரதோ‌‌ஷம் சனிப்பிரதோ‌‌ஷமாக வந்தது. இதனால் தஞ்சை பெரியகோவிலில் நேற்றுமாலை நந்திபெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் மற்றும் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
 
பக்தர்கள் தரிசனம்
 
மற்ற பிரதோ‌‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் நேற்று சனிப்பிரதோ‌‌ஷம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
 
பின்னர் நந்தி மண்டபத்தை சுற்றிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அமர வைக்கப்பட்டனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் நடராஜர் சன்னதி அருகேயும் பக்தர்கள் அமர வைக்கப்பட்டனர். மேலும் ஆங்காங்கே ஏராளமானோர் நின்றபடியும் அபிஷேகத்தை கண்டு களித்தனர்.
 
பின்னர் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அடுத்த சனிப்பிரதோ‌‌ஷம் அடுத்த ஆண்டு(2021) ஏப்ரல் மாதம் 24-ந் தேதி வருகிறது.
 
கொரோனா பரவல் காரணமாக தஞ்சை பெரியகோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குழந்தைகள், முதியவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாலும், தற்போது பள்ளி விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here