ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைக்கூத்தல். இதில் சமுத்திரக்கனி, கதிர்,வசுந்தரா,வையாபுரி, முருகதாஸ், கதாநந்தி, கலைச்செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கட்டிட தொழிலாளியான சமுத்திரகனி விபத்தால் தந்தை கலைச்செல்வன் சுயநினைவு இழந்து எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்க, அவரை கவனித்துக் கொள்ள தன் தொழிலை விட்டு விட்டு தனியார் ஏடிஎம் வங்கியில் காவலாளியாக வேலை செய்து கொண்டு மனைவி வசுந்தரா மற்றும் மகளுடன் வாழ்கிறார். தந்தையின் மருத்தவ செலவிற்கு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரகனிக்கு மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார்.
உடல்நலம்குன்றியிருக்கும் தந்தையை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்துமாறு மனைவி வசுந்தராவும், அவளுடைய குடும்பத்தாரும் சமுத்திரகனியை நிர்பந்திக்கிறார்கள். இதற்கு துளியும் உடன்படாமல் சமுத்திரகனி பிடிவாதம் பிடித்து தந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். கடன் கொடுத்தவர் வீட்டின் பத்திரத்தை வைத்து விற்க முயல இதனால் சமுத்திரகனிக்கும், வசுந்தராவிற்கும் சண்டை ஏற்பட்டு, தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகிறார் வசுந்தரா.
அதன் பின் சமுத்திரகனி என்ன முடிவு செய்தார்? தன் தந்தைக்கு தலைக்கூத்தல் செய்ய சம்மதம் தெரிவித்தாரா? சமுத்திரகனியும், வசுந்தராவும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே மனதை நெருடும் க்ளைமேக்ஸ்.
வசுந்தரா முக்கிய கதாபாத்திரத்தில் மாமனாரை பார்த்துக் கொள்வதில் ஒரு சில நேரத்தில் பாசமாகவும், ஒரு சில நேரத்தில் பாரமாகவும் கருதி கணவனிடம் சண்டை, சச்சரவு செய்து முடிவு எடுக்க கட்டாயப்படுத்தும் இடமும், இவர் நல்லவரா, கெட்டவரா என்ற கருத்தில் முரண்பாடான கேரக்டரில் பொருந்தி அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் செய்து கை தட்டல் பெறுகிறார். மகளாக நடித்திருப்பரும் துருதுருவென்று சிறப்பாக செய்து, கேட்கின்ற கேள்விகளை நறுக்கென்று கேட்டு சிந்திக்க வைத்து அசத்தியுள்ளார்.
யுகபாரதி பாடல்களில் கண்ணன் நாராயணனின் இசையும், பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு பொருந்தி மனதை வருடுகிறது.கிராமத்து நடைமுறைகள், நிகழ்வுகளை நம் கண் முன்னே நிறுத்தி அனைத்து காட்சிக்கோணங்களையும் திறம்பட கொடுத்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் டான்ராஜ். டேனி சார்லஸ் படத்தொகுப்பை நிறைவாக செய்துள்ளார்.