கொரோனா தொற்று அதிகரிப்பு:பங்குனி உத்திரம் ரத்தாகுமா?
பங்குனி உத்திரம் திருவிழா அனைத்து கோவில்களிலும் களைகட்டியுள்ளது. பக்தர்கள் கூட்டம் மாரியம்மன் கோவில்களிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் கோவில்களக்கு வரும் பக்தர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை விதித்துள்ளது. கோவில்களில் அர்ச்சனை செய்வது, பிரசாதம், தீர்த்தம் விநியோகம் செய்வதை தவிர்க்க வேணடுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனோ பரவத் தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
கொரோனா மெல்ல மெல்ல கட்டுப்பட ஆரம்பித்த பின்னர் நவம்பர் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பியது. கோவில்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பங்குனி மாதம் பிறந்துள்ளதால் கோவில்களில் திருவிழா, தேரோட்டம் என களைகட்டியுள்ளது. வருகிற 28ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
கோவில்களில் கட்டுப்பாடு
பங்குனி உத்திரம் திருவிழா முருகன் கோவில்கள், சிவாலயங்கள், பெருமாள், அம்மன் கோவில்கள் மற்றும் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற குலதெய்வ வழிபாடுகள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இடைவெளி அவசியம்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் கோவில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்க கிருமி நாசினி வழங்க வேண்டும். கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும்.
பங்குனி உத்திரம் ரத்தாகுமா?
முருகன் கோவில்களிலும் சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரியும் சாமி ஊர்வலம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தேரோட்டம் நடைபெறும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில்களுக்குள்ளேயே திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.