எதிர்வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, குவார்ட்டர் (சாதாரண மற்றும் நடுத்தர ரகம்) ரூ.10ம், ஆஃப் ரூ. 20ம், புல் ரூ.40, உயர்த்தப்படுகிறது. உயர்தர ரக மதுபானங்களைப் பொறுத்த வரையில், குவார்ட்டர் ரூ.20ம், ஆஃப் ரூ. 40ம், புல் ரூ.80ம் ஆக உயர்த்தப்படுகிறது. அனைத்து பீர் வகைகளின் விலையும் ரூ. 10 உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி, 1000 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.