வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதில் தனது பதவியை பயன்படுத்தி 55 சதவீதம் அளவுக்கு சொத்துகள் சேர்த்தது அம்பலமானது.
இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 2016 தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2 கோடியே 51 லட்சத்து 91ஆயிரத்து 378 ரூபாய் மதிப்பிலான சொத்து வைத்திருந்ததாக தனது வேட்பு மனுவில் தெரிவித்திருந்ததாகவும்,
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் 8 கோடி 62 லட்சத்து 35 ஆயிரத்து 648 ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டுள்ளது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.