ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது கொரோனா தடுப்புப் பணிகளை மேலும் வலுவடையச் செய்யும் விதமாக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2,500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறுமாத காலத்திற்கு நியமிக்கப்பட்டு, மருத்துவகல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலூகா மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப பணி அமர்த்தப்பட்டார்கள்.
இவர்களின் சேவை, தேவை என்ற நிலை இருந்ததாலும், ஆறுமாத கால பணி முடிந்த பின்னரும், அவர்களுடைய பணி தொடர்ந்தது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியினை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதன் காரணமாக பணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விடுவிக்கப்படலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
எனவே பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்து கொண்டிருந்த செவிலியர் பணியை விட்டுவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வந்துள்ள அவர்களை பணியிலிருந்து விடுவிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
சோதனையான காலகட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை புரிந்த செவிலியர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அழைத்து பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.