கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இப்படி நடைபெறும் சிறப்பு முகாம்களில் மக்கள் நள்ளிரவிலேயே வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.
மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சம் உள்ளதால், அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வரவில்லை. இதனால் அவர்கள் வாழும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், 500 தடுப்பூசிகளுடன் தொண்டாமுத்தூர் அடுத்துள்ள முள்ளாங்காடு மலை கிராமத்துக்கு சென்றனர்.
சுகாதாரத்துறையினர் வருவதை பார்த்த பழங்குடியின மக்களில் சிலர் தங்கள் வீடுகளில் இருந்து ஓட்டம் பிடித்து அருகே உள்ள தோட்ட பகுதிகளில் சென்று ஒளிந்து கொண்டனர். மற்றவர்கள் வீடுகளை அடைத்து கொண்டு வெளியில் வர மறுத்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் ஒவ்வொரு வீடாக சென்று தடுப்பூசியின் நன்மை குறித்து விளக்கம் அளித்து அவர்களை தடுப்பூசி செலுத்த அழைத்தனர்.
அவர்களின் நீண்ட நேர அழைப்புக்கு பிறகு 57 பேர் மட்டும் முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 600 வாக்காளர்களை கொண்ட இந்த பகுதியில் வெறும் 57 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரமாக சுகாதாரத்துறையினர் காத்திருந்தும் யாருமே வரவில்லை.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு காருண்யா நகர் அருகே உள்ள பட்டியால் கோவில்பதி மலை கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள மக்களும் இவர்கள் வருவதை கண்டதும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
ஒருசில பெண்கள் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த சுகாதாரத்துறையினர் அவர்களை தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் குறைவானர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வேறு பாதிப்பு ஏற்படவில்லை என்றால், நாங்களும் முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 2 கிராமங்களிலும் சேர்த்து 100-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.