நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாடு வெற்றி பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற்று வரும் மதுரை தவிர மற்ற மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக, கல்வியால் தகுதி வரட்டும்! தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.