முருகப்பெருமானின் அறுபடை வீடு உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் சொக்கநாதர் கோயில் முன்பு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பத்ம சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். 

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாக கருதப்படும் முருகனின் மூன்றாம் படைவீடான பழநியிலும் கந்த சஷ்டி பெருவிழாவை ஒட்டி சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கி கொண்டு மலையடிவாரத்திற்கு வந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நான்காம் படை வீடான கும்பகோணம் சுவாமி மலையில் சிவகுரு நாதனாக அருள்பாலிக்கும் முருகபெருமான் கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. 

முருகனின் ஐந்தாம் படையான  திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டியை ஒட்டி ஆயிரத்து 8 இலட்சார்ச்சனை நடைபெற்றது. இக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறாது என்பதால் பக்தர்கள் முன்னிலையில் மலைக்கோவிலில் 4 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி விமர்சையாக நடைபெற்றது. 

இதேபோல் ஆறாம் படை வீடான மதுரை மாவட்டம்  பழமுதிர்சோலையில் ஏராளமான பக்தர்கள் அரோகரா மற்றும் வெற்றிவேல் வீரவேல் என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வை பக்தி பெருக்கோடு பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு விமர்சயைாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here