தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி சன்னிதானத்தில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு கும்பஜெபம், கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, ஆறுமுக அர்ச்சனை உள்ளிட்டவை நடந்தன.

விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 7 மணிக்கு கும்பஜெயம், 10.35 மணிக்கு கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை, 12.30 மணிக்கு ஆறுமுக அர்ச்சனை நடந்தது. மாலை 4 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 4.25 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கியது. சூரசம்ஹாரம் தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்ய புறப்பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆலய வளாகத்தில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இந்த ஆண்டு வழக்கம் போல் ரதவீதியில் நடந்தது. முதலில் கஜமுகனை முருகபெருமான் வதம் செய்தார். அதன்பிறகு சிங்கமுகா சூரன், சூரபதுமனையும் வதம் செய்து சேவலாக சூரனை முருகபெருமான் ஆட்கொண்டார்.

பின்னர் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். திருக்கல்யாணம் இன்று (திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 4.25 மணிக்கு சுவாமி காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6.05 மணிக்கு தபசு காட்சி, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சங்கரராமேசுவரர் ஆலய திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 8 மணிக்கு திருமாங்கல்யம் பூட்டுதல், தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி, பட்டினபிரவேசம் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here