புதுடில்லி:

‘நீட்’ தேர்வை, ரத்து செய்யக்கோரி, பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக நீட் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக, ஜே.இ.இ., (மெயின்) ஆகிய தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.’நடப்பாண்டிற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு, இம்மாதம், 1 முதல், 6 வரையிலும், நீட் தேர்வு, 13ம் தேதியும் நடைபெறும்’ என, மத்திய அரசு அறிவித்தது.

தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நடப்பாண்டில், இவ்விரு தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, கடந்த மாதம், 17ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நுழைவுத் தேர்வுகள் விவகாரத்தில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என, தெரி வித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, பா.ஜ., ஆட்சியில் அல்லாத, ஆறு மாநிலங்களை சேர்ந்த அரசுகள், உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்தன.

இம்மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஏற்கனவே, ஜே.இ.இ., தேர்வுகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here