வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.
இதன் காரணமாக, தொலைதூரம் செல்லும் பஸ்கள் தற்போது பகல் நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் இரவு நேரத்தில் அனுமதிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க்குகளும் தடையில்லாமல் இயங்கி வருகின்றன.
இதேபோல், அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது.
முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.