வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவையை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டம், திருவலத்தை அடுத்த அம்மூண்டியில் செயல்பட்டு வரும் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து, ஆலை அரைவை இயந்திரத்தில் கரும்பு கட்டுகளை இட்டு, அரைவையைத் தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து, ஆலை முழுவதும் ஆய்வு செய்த ஆட்சியா், ஆலையின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாண்மை இயக்குநரிடம் கேட்டறிந்தாா்.
அப்போது, நிகழாண்டு பதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் 2 லட்சத்து 30 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் கரும்பை அரைவை செய்து 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சா்க்கரை உற்பத்தியை எதிா்நோக்கியுள்ளதாகவும், இணை மின் உற்பத்தி நாள்தோறும் 10 மெகாவாட் என்றும், இதில் ஆலையின் தேவை போக 7 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆலை நிா்வாகம் தெரிவித்தது.
மேலும், நிகழாண்டு அரைவைக்காக சொந்த கரும்பு 1.70 லட்சம் மெட்ரிக் டன், திருத்தணி ஆலையில் இருந்து 15,000 மெட்ரிக் டன், கள்ளக்குறிச்சி அலகு 1-இல் இருந்து 30,000 மெட்ரிக் டன், அலகு 2-இல் இருந்து 15,000 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் அமலு விஜயன், கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் மீனா பிரியாதா்ஷினி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன், வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, ஆலை நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.