சென்னை போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 52). இவர் சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவருக்கு கடந்த 10-ந்தேதி திடீர் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, உடல்நலக்குறைவு உண்டானது. அதைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிசோதனை செய்து கொண்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் திடீரென பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது உடல் அபிராமபுரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
கொரோனாவுக்கு பலியான சப்-இன்ஸ்பெக்டர் குமாருக்கு ரீனா என்ற மனைவியும் மோனிகா (28), டென்சல் (26), என்ற மகனும் உள்ளனர். கொரோனா தொற்று 2-வது அலை பரவலில் கடந்த 18-ந்தேதி சென்னை யானைக்கவுனி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்பட இதுவரை 2 போலீஸ் ஏட்டுகள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் ஏற்கனவே பலியான நிலையில், தற்போது மதுரவாயல் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் 5-வதாக கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த 10 நாட்களில் 5 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், கொரோனா தாக்குதலுக்கு பலியாகி வருவது தொடர்கதையாக உள்ளதால் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here