திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் வாசு (வயது 52). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். சாணார்பட்டி வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
அந்த தொகையை அருகில் உள்ள ஒரு மருந்து கடையில் கொடுத்தால் வாகனத்தை விடுவிப்பதாக கூறியுள்ளார். அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ரூ.2 ஆயிரம் பணத்தை மருந்து கடையில் கொடுத்துள்ளனர்.
இதனிடையே சப்-இன்ஸ்பெக்டர் வாசு செல்போனில் பேசிய உரையாடல் அனைத்தையும் பதிவு செய்தனர். இதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். இது குறித்து விசாரணை நடத்தும்படி மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியாவுக்கு டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவிட்டார்.
விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு பணம் பெற்றது உறுதியானது. இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவிட்டார்.