திருப்பூரில் தேங்கி கிடக்கும் மழைநீர்….நோய் பரவும் அபாயம்!

0
2

திருப்பூர்:

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. சேமிப்பு கிடங்குகள் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் ஒழுங்குமுறை விற்பனை மைய அலுவலகம் மட்டுமல்லாமல் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் மின்னணு வேளாண் சந்தை, கரும்பு ஒட்டுண்ணி மையம் உள்ளிட்டவையும் இந்த வளாகத்தில் செயல்படுகின்றன.

இது தவிர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை காய வைக்க உலர் களங்கள், இருப்பு வைக்க சேமிப்புக் கிடங்குகள், மக்காச்சோள சுத்திகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் எந்திரம், நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம் ஆகியவையும் இங்கு உள்ளது. இதனால் தினசரி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

சுகாதார சீர்கேடு இந்தநிலையில் இந்த வளாகத்தில் சேமிப்புக் கிடங்குக்கு அருகில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பல நாட்களாக தேங்கியுள்ளது. இதனால் அந்தப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அத்துடன் தேங்கியுள்ள நீரில் கழிவுகள் சேர்வதாலும், கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளதாலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் இந்த பகுதியை ஒட்டி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள எடை மேடைக்கான நுழைவு வாயில் முன் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த நுழைவு வாயிலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விளை பொருட்களை இருப்பு வைப்பதற்காக வரும் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் மழைநீர் வடிகால்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உலர் களங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். எனவே தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், முறையான வடிகால் வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here