இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் 15 நாள்களுக்கு மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது ஊரடங்கு கிடையாது. எனினும் ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடக்கவிருந்த 10-ம் வகுப்பு சிபிஎஸ் சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் மே 4-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடக்கவிருந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ் சி பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. . ஜூன் 1-ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.