கணவன் உடனான கள்ளக்காதலை கைவிட வற்புறுத்திய கர்ப்பிணி அக்காவை அவரது தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பவுகொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 26-ம் தேதி கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் தனது மனைவி ஏலா மற்றும் மனைவியின் தங்கை தமன்னா ஆகிய மூவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒசூர் அடுத்த பவுகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இதனிடையே ஏலா கர்ப்பமான நிலையில் ராகுலும், தமன்னாவும் வேலைக்கு சென்ற போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் தமன்னாவின் சகோதரி ஏலா, இருவரையும் கண்டித்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராகுலும், தமன்னாவும் ஏலாவை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 21-ம் தேதி கர்ப்பிணி பெண் என பாராமல் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அங்குள்ள தைலத்தோப்பில் வீசிய நிலையில், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், கள்ள உறவை கண்டித்த சகோதரியை சொந்த தங்கையும் ராகுலும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தமன்னாவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராகுலை தேடி வருகின்றனர்.