தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78) சென்னையில் இன்று காலமானார். இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இவருடைய திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இன்று காலை 11 மணியளவில் வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மலர் என்பவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பணிப்பெண் மலர் என்பவர் மயிலாப்பூரில் உள்ள வாணி ஜெயராமின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்
அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது வாணி ஜெயராம் படுக்கையில் இருந்து கீழே விழுந்து கண்ணாடி டேபிளில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். தற்போது வாணி ஜெயராமின் உடல் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.