இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லின் திறமை சந்தேகத்திற்கு இடமில்லாதது, ஆனால் அவரது முதல் டி 20 கிரிக்கெட் சதமானது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலும் ரன் இயந்திரமாக திகழும் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 63 பந்துகளில், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 126 ரன்களை வேட்டையாடினார். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லின் முதல் சதமாக இது அமைந்திருந்தது. அதிலும் தனது 6-வது ஆட்டத்திலேயே சதம் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சதம் அடித்தது மட்டும் இல்லாமல் டி 20 கிரிக்கெட்டின் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஷுப்மன் கில். இதற்கு முன்னர் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி 20 என அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சதம் விளாசிய 5-வது வீரர் என்ற பெருமையையும் குறுகிய காலத்திலேயே பெற்றுள்ளார் ஷுப்மன் கில்.

23 வயதான ஷுப்மன் கில் அனைத்து ஷாட்களையும் விளையாடுவதில் திறமை பெற்றிருந்தாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் எந்தப் பங்கையும் அளிக்கவில்லை. மேலும் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தனக்கான இடத்தை இன்னும் அவர், உறுதியாக தக்கவைத்துக் கொள்ளவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில் ஷுப்மன் கில் சதம் விளாசி முக்கிய பங்களிப்பை வழங்கி இருந்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். இந்த ஆட்டம் அவருக்கு ‘ஸ்மூத்மேன் கில்’ எனும் புனைப்பெயரை பெற்று கொடுத்துள்ளது. இதற்கு காரணம் சுனில் கவாஸ்கர் போன்று சுதந்திரமான வகையில் ஷாட்களை ஷுப்மன் கில் அடிப்பதுதான்.

டி 20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஷுப்மன் கில் வெளிப்படுத்திய திறனுக்காக மட்டும் அல்ல, பணி நெறிமுறை மற்றும் விளையாட்டின் மீதான நேர்மையின் காரணமாக அவர் தனது வாழ்க்கையில் நிச்சயமாக பெரிய உயரங்களை அடைவார்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் விளையாடும் பாணியும், தொழில் நுட்பமும் ஷுப்மன் கில்லிடம் இருப்பதை நான் முன்பே கண்டறிந்துவிட்டேன். அதனால் அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. அவரால் செய்யக்கூடிய சிரமமற்ற பேட்டிங்கை, பலரால் செய்ய முடியாது. ஒரு இளைஞனாக எல்லா வடிவங்களிலும் விளையாடுவது அவருக்கு நிறைய அர்த்தத்தையும், விளையாட்டுக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் சேர்க்கிறது” என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறும்போது, ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி மனதை வென்றார் என்பது மறுப்பதற்கில்லை. ஒருநாள்கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட்டில் அவர், விளையாடிய விதம் இந்தியா ஒரு அற்புதமான வீரரை கண்டுபிடித்ததை நிரூபிக்கிறது. அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் விளையாடக்கூடிய வீரர். விராட் கோலிக்குப் பிறகு அவர் சிறப்பாக வரப் போகும் அடுத்த பெரிய பேட்ஸ்மேன்” என்றார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் ஷுப்மன் கில் 360 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பாகிஸ்தானின் பாபர் அஸமின் சாதனையை சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியை தொடர்ந்து இந்திய அணியின் ரன் குவிக்கும் புதிய இயந்திரமாக உருவெடுத்துள்ளார் ஷுப்மன் கில். இது அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர், மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here