இராமநாதபுரம்:
 
தொடர்ந்து மழை பெய்தும் வைகை ஆற்றில் தண்ணீர் வந்தும் 23 கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளது. இதனால் பசான கால்வாய்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணை முழுமையாக நிரம்பி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இதனால், இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த தண்ணீர் தொடர்ந்து கடலில் கலக்கிறது.  பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது இடது பிரதான கால்வாய்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. கல்லியடிந்தல் அருகில் பிரியும் கால்வாயில் 2 கிலோ மீட்டர் வரை மண் திட்டுகள் உருவாகியுள்ளன. இவை அகற்றப்படாமல் உள்ளதால் அக்கிரமிசி, வல்லம், பகை வென்றி, அஞ்சாமடைதவளைகுளம், நாகாச்சி, குளத்தூர், அரசடி வண்டல், காவனூர் நயினார்கோவில், கரைமேல் குடியிருப்பு,வானியவல்லம் உட்பட 23 கண்மாய்களுக்கு தண்ணீர் எட்டி பார்க்காத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
விவசாயி ராமன் கூறுகையில்:
 
அக்கிரமசி உள்ளிட்ட 23 கண்மாய்களில் தண்ணீர் நிரம்பாமல் உள்ளது.கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெயரளவிற்கு மட்டுமே மழை பெய்தது. கீழராமநதி தலைவயநாயக்கன்பட்டி, உடைகுளம், புளிச்சிகுளம், கே.நெடுங்குளம்,நெருஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, பேரையூர், சேர்ந்தகோட்டை, கீழவலசை, செங்கோட்டைபட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெற்பயிர் மற்றும் மிளகாய் உட்பட பல பயிர்கள் கருகி வருகின்றன. 
 
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாயம் வீணாகி போன நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள ஏராளமான கண்மாய், ஊரணிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளும் குடிதண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான், மயில், நரி போன்ற வன விலங்குகளும் குடிக்க தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here