இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கமுதி நீதிமன்றத்துக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் கார், பைக்குடன் நின்றுகொண்டிருந்த ஏழு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்து, அவர்களது காரைச் சோதனையிட்டனர். அதில் கத்தி, அரிவாள், வாள்,ஆயுதங்களுடன் மிளகாய்ப்பொடி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து, கமுதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (35), சிவசங்கர் (23), சரவணன் (24), விக்னேஸ்வரன் (22), மண்டலமாணிக்கத்தைச் சேர்ந்த வல்லரசு (22), மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் (33), மதுரை சிலைமானைச் சேர்ந்த ஷஉசேன் (24) என்பதும்… இவர்கள்மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரௌடிகள் பட்டியலில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.
கமுதி நீதிமன்றம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளிவந்தன. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கு தொடர்பாக கமுதி நீதிமன்றத்துக்கு ஆஜராக வரும் பாலகுமார் என்ற ரௌடியை முன்விரோதம் காரணமாகக் கொலைசெய்யச் சென்றிருந்தோம். ஆனால், நாங்கள் காத்திருப்பதை அறிந்து பாலகுமார் நீதிமன்றத்துக்கு வராமல் தப்பிவிட்டார். அவர் தப்பிவிட்டதால், ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு முன்பு வழிப்பறியில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தோம்” என விசாரணையில் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் ஏழு பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த கார், மோட்டார்சைக்கிள், ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில்வைத்து ரௌடியைக் கொலைசெய்யத் திட்டமிட்ட ஏழு பேரை பயங்கர ஆயுதங்களுடன் போலீஸார் கைதுசெய்திருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.