திருப்பத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மகன் ஜிம்கண்ணன். இவர் 7 ஆவது வார்டு பேரூராட்சிமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.திமுக சார்பில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று இப்பதவியில் உள்ளார். இவர் பணி நிமித்தமாக சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை இவரது மனைவி காளீஸ்வரி, தன்னையும் மகள்களையும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளனர் என்று அலைபேசியில் கூறியதையடுத்து ஜிம்கண்ணன் பக்கத்து வீட்டினரிடம் கூறியுள்ளார், அவர்கள் வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் அறைக்குள் இருந்தவர்களை வெளியே திறந்து விட்டபின் நகை மற்றம் பணங்களைப் பார்த்த போது திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் காவல் ஆய்வாளர் கலைவாணி, சார்பு ஆய்வாளர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போனதாகத் தெரிகிறது. நள்ளிரவில் வீட்டின் பின்புறமாக நுழைந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த பொருள்களுடன் ஜிம்கண்ணனின் இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரத்தில் இருசக்கர வாகனம் செயல்படாததால் அருகிலிருந்த சுந்தரபாண்டியன் என்பவரது இருசக்கர வாகனத்தில் சாவியைப் போட்டுள்ளனர். அந்த வண்டி இயங்கவே அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து சிவகங்கை கைரேகை நிபுணர் துறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யூசூப் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த நேற்று முன் தினம் இதே தெருவில் கமலம் என்பவர் குடும்பத்தினருடன் ராமே்ஸ்வரம் சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்ட நிலையில் ரூ.5, 500 திருடு போயிருந்தது தெரியவந்தது. இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.