ஹெலிகாப்டரில் பிரச்சாரம், கழுத்து நிறைய நகைகள், சொகுசு ரெசார்ட்டில் மாஷ்அப் பந்தா என தன்னை அசைக்க முடியாத பெர்சனாலிட்டியாகக் காட்டிக் கொண்ட ஹரிநாடார் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்தே 3வது முறையாக கைது செய்யப்பட்டு பெர்மனன்ட் சிறைப்பறவையாக வலம் வருகிறார்.
கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தவர் ஹரிநாடார். காலப்போக்கில் தொழில் அதிபராக உயர்ந்தவர். ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இளைஞர் பட்டாளம், ஹெலிகாப்டரில் பிரச்சாரம் என அவரது தேர்தல் பிரச்சாரம் ஹைடெக்காக இருந்தது.
இந்த நிலையில்தான் கேரள மாநிலத்தில் வைத்து ஹரிநாடாரை கர்நாடக போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போதுதான், ஹரிநாடாரின் நூதன மோசடி அம்பலமானது. தொழில் அதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி முன்கூட்டியே கமிஷன் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட்ரமணி என்பவருக்கு 150 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி கமிஷன் தொகையாக 16 கோடி ரூபாய் வாங்கி மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் கேரள மாநிலம் கோவளம் அருகே உள்ள பூவார் கடற்கரையோரம் தனியார் சொகுசு விடுதியில் மறைந்திருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது மோசடி, கொலை மிரட்டல், கூட்டுச் சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிநாடாரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவுபோலீசார் கைது செய்தனர். ஹரிநாடார் சிறையில் இருந்த போது, குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகியோர் அவர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்திருந்தனர்.
புகார் அளித்து 22 மாதங்களுக்குப் பிறகு ஹரி நாடாரை பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்தே கைது செய்தனர். அதன் பின் மார்ச் 3ம் தேதி சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 16 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், நெல்லை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆவுடையப்பன், ஹரிநாடாரை வெள்ளிக்கிழமை கைது செய்தார். கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது பணமோசடி புகார் ஒன்றை திருநெல்வேலி மாநகர காவல்துறையினரிடம் கடந்த 2021ம் ஆண்டு வழங்கியிருந்தார்.
200 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 63 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகாரில் குற்றம்சாட்டியிருந்தார். புகார் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கடந்த 23 மாதங்களாக சிறைவாசியாக இருந்து வரும் ஹரி நாடாரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடுத்தக்கட்டமாக அவரை நெல்லை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஹரிநாடார் மீது மோசடிப் புகார்கள் குவிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு அவரை நிரந்தர சிறைப்பறவையாக வைத்தள்ளனர் போலீசார்.