திருமலை:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கூடூர் டிஎஸ்பி ராஜகோபால், இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் சீனிவாசபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் 62 செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை பெரம்பூரை சேர்ந்த முகைதீன், பூகாரி, ஜலாவுதீன் என்பதும், செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், லாரியுடன் 13.54 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள், 1.07 லட்சம் ரொக்கம், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மரக்கட்டை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆந்திரமாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கூடூர் அடுத்த பாலய்யபள்ளி கிராமத்தை சேர்ந்த சாகுல் உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.