ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கியது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி என்ற இடத்தில் தமிழக சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக ஆந்திராவில் இருந்து லாரியில் செம்மரக்கட்டைகள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று காலை சோதனைச்சாவடியை கடந்து ஆந்திராவில் இருந்து வந்த லாரி ஒன்று வேகமாக தமிழக எல்லைக்குள் நுழைந்தது. ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்றதால் போலீசார், மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும் டிரைவர், லாரியை வேகமாக ஓட்டினார். கே.ஜி.கண்டிகை என்ற கிராமம் அருகே சென்றபோது, லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருத்தணி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சென்று லாரியை சோதனை செய்தனர். அதில் லாரியில், ரூ.1 கோடி மதிப்புடைய சுமார் 2 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிந்தது.
லாரியுடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தி வந்து பிடிபடுவது இந்த மாதத்தில் இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.