அம்பத்தூர் பகுதியில் மரப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 520 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அம்பத்தூரில் கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில் அம்பத்தூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அம்பத்தூர், விஜயலட்சுமிபுரம், மணி தெருவில்  உள்ள பழைய மரப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கிருந்த 520 கிலோ எடையுள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் சேமிப்புக் கிடங்கை மூடிய நிலையில், செங்குன்றம் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த வனத் துறையினர், பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

புகாரின் பேரில், வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பழைய மரச் சேமிப்பு கிடங்கின் உரிமையாளரான, அம்பத்தூர், ஒரகடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (67) என்பவரை கைது செய்தனர். பின்னர் அதிகாரிகள் அவரை அம்பத்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here