சீமானின் ஆண்டு வருமானம்?! 

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல, 4.72 லட்சம் ரூபாய் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். 

அதில் கடந்த நிதியாண்டில் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் வெறும் ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கணக்கிடும் போது அவருக்கு ஒரு நாளைக்கு அவரது வருமானம் 2 ரூபாய் 77 பைசா தானா? என்ற விமர்சனம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் எழுத்து பிழை ஏற்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீமானின் ஆண்டு வருமானம் ரூ. 1000 அல்ல என்றும் ரூ. 4,72,900 என்றும் குறிப்பிடப்பட்டு புதிய பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் புதிய பிரமாணப்பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் தாக்கல் செய்த பட்டியலில் 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. தற்போது  2016-2017ல் ரூ.2,65,890, 2017-18 ல் 2,82,900 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here