போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை அரசுடமை ஆக்கும் அவசர சட்டம் ஏற்கனவே பிறப்பிக் கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வீட்டை பராமரிக்க ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி துறை இயக்குனர் சங்கர் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
இந்த அறக்கட்டளையை சட்டமாக்க சட்டசபையில் இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இதை தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட முன்வடிவு, 2020-ம் ஆண்டு மெட்ராஸ் பொருளாதார பள்ளி சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்ட முன் முடிவு.
அதிகார அமைப்பு சட்ட முன்வடிவு ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் நலம் திருத்தச்சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள், தமிழ்நாடு ஊராட்சி 3-ம் திருத்த சட்ட முன்வடிவு, திருமணங்கள் பதிவு செய்தல் திருத்த சட்ட முன்வடிவு, நீதிமன்ற கட்டணங்கள் திருத்த சட்ட முன்வடிவு.
வழக்கறிஞர்களுடைய எழுத்தர்கள் நல நிதிய திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பொது அறக்கட்டளை சட்ட முன்வடிவு சட்டங்கள் ஆகியவற்றின் சட்ட முன் வடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக சட்ட முன்வடிவு திருத்த சட்ட முன்முடிவு மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார்.
இவை தவிர தமிழ்நாடு நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு உள்பட 19 சட்ட மசோதாக்கள் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.