சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மாணவி சத்யாவை காதல் தொந்தரவு கொடுத்த சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சத்யா உயிரிழந்த நிலையில், 7 தனிப்படை அமைக்கப்பட்டு சதீஷை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சதீஷை சைதாப்பேடை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது அவர்களை சூழ்ந்துக் கொண்ட வழக்கறிஞர்கள், “ஏன் முகத்தை மூடி அழைத்து வந்தீர்கள்” என்று கேள்வி எழுப்பி சதீஷை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்றம், சதீஷை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது வழக்கறிஞர்கள் குற்றவாளி சதீஷிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளி சதீஷை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கை ரயில்வே காவல்துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சத்யா மற்றும் தற்கொலை செய்து கொண்ட அவரது தந்தை மாணிக்கத்தின் உடல் பழவந்தாங்கல் கண்ணன் காலனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இருவரின் உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.