நடிகர் ராமராஜன், ராதாரவி, எம். எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே. எஸ். ரவிக்குமார், நக்க்ஷா சரண், லியோ சிவகுமார், ஸ்மிருதி வெங்கட், அபர்னதி மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியுள்ளது சாமானியன் திரைப்படம்.
மதுரையில் இருந்து சென்னை வரும் நாயகன் ராமராஜன், தனியார் வங்கி ஒன்றில் நுழைந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு முனையில் அங்கிருப்பவர்களை சிறை வைக்கிறார். அந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தாலும், அவற்றை எடுக்காமல், மூன்று நிபந்தனைகளை அரசுக்கு வைக்கிறார். வங்கியின் உதவி மேலாளரிடம் இருந்து ரூ.2.75 லட்சம் , வங்கி மேலாளரிடம் ரூ.3.50 லட்சத்திற்கான மூன்றாண்டுகள் வட்டியை மொத்தமாக கேட்கிறார். மூன்றாவதாக, வங்கியின் மற்றொரு அதிகாரி வசித்து வரும் வீட்டை காலி செய்து, மதுரையில் உள்ள இளம் தம்பதி மற்றும் அவர்களது குழந்தையை அழைத்து வந்து குடி வைக்க வேண்டும் என்று மூன்று நிபந்தனை வைக்கிறார்.
பின்னணியில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் காவல்துறை குழப்பமடைவதோடு, தமிழகமே இந்த விசயத்தை உற்று நோக்க ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், ராமராஜன் மதுரையில் இருந்து அழைத்து வர சொன்ன இடத்திற்கு காவல்துறை சென்று பார்க்கும் போது, அங்கு மூன்று சமாதிகள் மட்டுமே இருக்க, இறந்து போனவர்களுக்கும் ராமராஜனுக்கும் என்ன தொடர்பு? அவருடைய இத்தகைய செயலின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக களம் இறங்கியிருக்கும் ராமராஜன், கதாநாயகி, காதல், பாடல் என்று கமர்ஷியல் நாயகனாக அல்லாமல், தற்போதைய வயதுக்கு ஏற்ற கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். என் வாழ்க்கை டவுசரோட தான் தொடங்கியது என்ற வசனம் கேட்க வைக்கிறது. மீண்டும் செம்பகமே பாடல் திரையில் ரசிக்க வைக்கிறது. ராதாரவி, எம். எஸ். பாஸ்கர் உடை, பாவானை எல்லாம் சிறப்பு.
இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் மற்றும் லக்ஷா சரண் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். சொந்த வீடு என்ற கனவு நினைவான பிறகும், கடன் தொல்லையால் நிலைகுலைந்து போகும் இவர்களது வாழ்க்கை, பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. லோன் வசூலிப்பவர் தொல்லையை படம் சொல்லுது.
ராமராஜனின் நடிப்பு ஓகே தான்… சண்டை காட்சி பெரிய அளவில் இல்லை… ராணுவ அதிகாரியின் உடல் வடிவம் எப்படி கட்டுகோப்பாக இருக்கும் ஆனால் முன்னாள் ராணுவ அதிகாரியாக வரும் நம்ம ராமராஜன் தொப்பையாக இருப்பதை இயக்குனர் ஏன் கவனிக்கவில்லையோ…. ஒரு தனி நபர் இப்படி பேங்க் உள்ளே போய் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்து மிரட்டுவது எல்லாம் ரொம்ப ஓவரப்பா…… இது ஒரு புறம் இருக்க இளையராஜா பாடல் நல்லா இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்து கேட்டால் அதுவும் சொதப்பல் என்றே சொல்லலாம். முதல் பாதியில் ரசிகர்கள் வேதனை. இரண்டாம் பாதியில் சோதனை.
சாமானியன்- கடன், லோன் விழிப்புணர்வு