உயர்கிறது டோல்கேட் கட்டணம்!

0
27

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிக்கத் தேசிய நெடுஞ்சாலை தான் பாதுகாப்பான, விரைவான பயணத்தைச் செய்ய உதவுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்று என அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்.1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆவணப் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்வைப் பொருத்தவரை இலகு ரக வாகனங்களுக்கு ஒரு ட்ரிப்பிற்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 விழுக்காடு அதிகமாகவும், கன ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 விழுக்காடு அதிகமாகவும் ஏப் 1ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் எனத் தெரிய வருகிறது.

ஃபாஸ்ட்டேக் முறையில் தற்போது கட்டண வசூல் நடப்பதால் கார்டில் கழிக்கப்படும் தொகை அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2022ம் ஆண்டும் டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பொழுது 10 முதல் 20 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டது. இதனால் வாகனங்கள் அப்பொழுது செலுத்தி வந்த கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.60 வரை கட்டணம் அதிகமாகச் செலுத்த வேண்டியது இருந்தது.

தற்போது மத்திய அரசு எக்ஸ்பிரஸ் சாலைகளில் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. அதன் படி ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.19 கட்டணமாக வசூலிக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலை கட்டணமும் வரும் ஏப்.1-ம் தேதி முதல் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.33,881 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு வசூலோடு ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018-19 நிதியாண்டை ஒப்பிடும் போது சுமார் 32 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த 2022ம் ஆண்டு ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ.139.32 கோடி கட்டணமாக வசூலாகியுள்ளது. இதில் பெரும்பாலான பணம் ஃபாஸ்ட்டேக் கருவி மூலம் பரிவர்த்தணை செய்யப்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here