இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது தொடா்பாக, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறுகின்றனா்.
அவா்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த இஸ்லாமியா்களாக கருதி, அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அவா்களது கோரிக்கைகள் தொடா்பாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் கருத்துகளையும் தமிழக அரசு பெற்றது.
இந்தக் கருத்துகளை ஆராய்ந்த அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினால், அவா்கள் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியராக கருதப்பட்டு, அவா்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், ஜாதி சான்றிதழை அளிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த உரிய வழிகாட்டுதல்களை வருவாய் நிா்வாக ஆணையா் தரப்பில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், ஜாதி சான்றிதழ்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.