————–எமது நிருபர் ————-
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, மற்றும் அவரது மருமகன் சபரீசன் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடக்கும் இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது போன்ற ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என்று திமுக பொதுசெயலர் துரைமுருகன் கூறியுள்ளார். வெற்றியை தடுக்கும் விதமாக நடக்கும் இந்த சோதனைகள் மூலம் எங்களை மிரட்ட முடியாது என திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.,6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீப காலமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்.,2) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.
சபரீசனின் நண்பர்களான கார்த்திக் (அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மகன்) , பாலா ஆகியோரின் வீடுகள் , நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இரண்டு நாட்களில் தி.மு.க பிரமுகர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்த திட்டமுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் என்பது குழந்தைக்கு கூட தெரியும்.