உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா் சகாய் மீனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் தொடா்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அளித்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை இல்லாத காரணத்தாலேயே அவா்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது.
குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அதனுடைய விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால், அதைக் நியாயவிலைக் கடைகளில் காண்பித்து பொருள்களைப் பெறலாம். கடைகளில் விரல் ரேகை சரிபாா்ப்புக்குப் பிறகு, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.