பாலியல் புகாருக்கு உள்ளான சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று காலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக சரியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்திருந்தது.
இன்று காலையில் இருந்தே சமூக வலைத்தளத்தில் சென்னை கே.கே நகரில் இருக்கும் பத்மாசேஷாத்திரி பள்ளியில் வேலை பார்க்கும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பல்வேறு மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி இருந்தனர். இந்த புகார் தொடர்பான கடிதமும், குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரமும் ஆதாரபூர்வமாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக பிரபல பாடகி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
அதேநேரத்தில் இந்த விவகாரத்தை பொறுத்தவரை ராஜகோபாலன் மீது பத்மா சேஷாத்திரியில் படித்த முன்னாள் மாணவர்கள் எல்லாம் தொடர்ந்து இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி நேரடியாக சென்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
ராஜகோபாலன் குறித்த அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொண்டு மடிப்பாக்கத்தில் அவர் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து தனிப்படை போலீசார் அவரை அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்தனர். அந்த அடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணையர் அலுவலகத்தில் தற்போது ராஜகோபாலனை துணை ஆணையர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
அவரிடம் மாணவிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டால், இதுதொடர்பாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர் மீது வழக்கு பதியப்பட்டு அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.