கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதை விட ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதைக் கண்டு பிடிப்பதுதான் பெரிய விஷயம்!
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், ரஜினி புதிய கட்சியைத் துவக்குவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. அதனால் ரஜினியின் நிலைப்பாடு தெரியாமல், அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க நினைத்திருக்கும் பெரிய கட்சிகள் குழப்பத்தில் இருக்கின்றன. அதைவிட, அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ரஜினியின் கட்சியில் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள் என்று நினைத்த தொழிலதிபர்கள், வேறு கட்சிகளில் தாமரை இலைத்தண்ணீராக ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துக் கிடக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறைகளும் ரஜினியின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ரஜினியைச் சந்தித்துப் பேசிவரும் பலரிடமிருந்தும் கிடைக்கின்ற தகவல்களைத் திரட்டி, அரசு மேலிடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் உளவுத்துறையினருக்குத் தெளிவாகத் தெரியவந்திருக்கிறது.
ரஜினிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் அவர் வெளியே வந்தாலே அவர் உடல் நலனுக்கு ஆபத்து என, எச்சரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இதை அவர்களுடைய குடும்பத்தினரும் விரும்புவதில்லை. கட்சி துவக்கினால் நிர்வாகிகளை, தொண்டர்களை, வி.ஐ.பி.,க்களை சந்தித்தே ஆகவேண்டும்.
ஆனால் அதற்கெல்லாம் ரஜினியின் உடல்நிலை கண்டிப்பாக ஒத்துழைக்காது. ஏற்கனவே கட்சிக்கு ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தால், ஓரளவுக்கு தேர்தல் வேலைகளைத் துவக்கியிருக்கலாம். ஆனால் அதற்கும் இப்போது காலஅவகாசம் இல்லை என்பதால், ரஜினி புதிதாகக் கட்சியைத் துவக்குவது இன்னும் உறுதியாகாத விஷயம் என்றே உளவுத்துறையினர் கணித்திருக்கின்றனர்.
ரஜினியின் கட்சியில் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று கருதப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, பா.ஜ., கட்சியில் சேர்ந்துவிட்டார். ரஜினியைச் சந்தித்த பின்பே, அவர் பா.ஜ.,வில் சேர்ந்ததால் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெரிந்தே அவர் இந்த முடிவை எடுத்தார் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதை விட ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதைக் கண்டு பிடிப்பதுதான் பெரிய விஷயம் போலிருக்கிறது!