சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு மட்டுமே இதுவரை தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 51வது தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்தார்.

இந்திய திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பலதுறைகளில் பங்களிப்பை தந்துள்ள ரஜினிகாந்துக்கு இந்த விருதை அறிவிப்பதாக ஜவடேகர் தெரிவித்தார். பிரபல பின்னணி பாடகர் ஆஷா போன்ஸ்லே, மலையாள நடிகர் மோகன்லால், சுபாஷ் காய், பிஷ்வத் சட்டர்ஜி, பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய குழு இந்த விருதுக்கு ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது.

மேலும் இந்த விருது அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருதுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், தேர்வுக்குழுவினரின் பரிந்துரையின் பேரில் இந்த விருது அளிக்கப்படுகிறது.இந்திய திரைத்துறையில் 50 ஆண்டுகளாக ரஜினி உள்ளார். திரைத்துறையில் அளிக்கப்படும் விருதுக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை என பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தனது அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நண்பர் கமல், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here