தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்-அமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான ரூபாய் முதல், தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர், கடைநிலை ஊழியர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தன.